Tuesday, July 20, 2010

நமக்கு பிடித்தவர்கள் செய்வது எல்லாம் சரி ஆகாது. அது போல் பிடிக்காதவர்கள் செய்வது எல்லாம் தவறு ஆகாது. விதுர நீதி தொடர்ச்சி.

மகா பாரதத்தில் விதுரர் திருதராஷ்டிரனுக்கு பாண்டவர்களுக்கு சொத்தைப்  பிரித்துக் கொடுத்து விடு என்று பல வழிகளில் உபதேசிக்கிறார். மகா பாரதம் கதையாக சொல்லப் பட்டிருந்தாலும் அதில் அரிய பல விஷயங்கள் உள்ளன. விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கப் பட்டிருந்தாலும், அது எப்போதும் நாம் கடைப் பிடிக்க என்று  சொல்லப் பட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம்.
தனது மகன் துரியோதனன் செய்தது தவறு என்று தெரிந்தும், திருதராஷ்டிரன் துரியோதனன் செய்த அத்தனை கெட்ட காரியங்களையும் ஆமோதித்து வந்தான். துரியோதனன் தனக்கு பிடித்தவன் என்பதால்  அவன் செய்தது எல்லாம் சரி என்றே எடுத்துக் கொண்டான். அதுவே துரியோதனனுக்கு அழிவு ஆகியது. மேலும் பாண்டவர்கள் தனக்கு பிடிக்கவில்லை ஆதலால் அவர்கள் செய்வது தவறு என்றே எடுத்துக் கொண்டான்.

எனவே அவ்வாறு செய்வது சரி அல்ல என்றும் அவனை நல்ல வழிக்கு வா என்றும் விதுரர் உபதேசித்தார்.

மேற் கொண்டு விதுரர் சொன்னதை பிறகு பாப்போம்.

Monday, July 5, 2010

தானம் செய்வது எப்படி - விதுர நீதி தொடர்ச்சி

மகாபாரதத்தில் உள்ள விதுர நீதியில் பல விஷயங்கள் சொல்லப் பட்டுள்ளன.  விதுர நீதி திருதராஷ்டிரனுக்காக விதுரர் சொன்னது ஆகும்.  விதுரர் மகா ஞானி. அவர் தர்மத்தின் அம்சம் ஆவார்.  உபதேசங்கள் தர பலர் இருந்தாலும் உபதேசங்களை உபதேசிப்பவர்கள் முதலில் பின்பற்ற மாட்டார்கள். ஆனால் விதுரர் அப்படி இல்லை. அவர் பின்பற்றியதையே உபதேசித்துள்ளார்.  மஹா பாரத்தில் விதுரரும் சஞ்சயனும் பல உபதேசங்களை தந்துள்ளனர்.  அவற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு பிறகு பின்பற்ற முயற்சிக்கலாம்.  விதுர நீதியை பின்பற்ற நாம் சத்துவ குணம் உடையவராக இருக்க வேண்டும்.

தானம் எவற்றை கொடுக்க வேண்டும்

தானம் நாம் நேர்மையாக சம்பாதித்த பொருளையே கொடுக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் வந்ததை கொடுத்தால் அது தானம் ஆகாது.

அந்த காலத்தில் ராஜாக்கள் தானம் கொடுக்கும் போது தானமாக கொடுக்கம் படும் பொருள் நேர்மையாக சம்பாதித்தது  என்று பிரதிக்ஞை செய்தால் தான் ஞானிகள் பெற்றுக் கொள்வார்களாம். எனவே தானம் கொடுக்கும் பொருள் நேர்மையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும்.

அடுத்து தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும். அந்த பொருள் மீது நாம் உரிமை கூறக் கூடாது. கோவிலுக்கு ஒரு விளக்கை போட்டு விட்டு அதில் இன்னார் உபயம் என்று எழுதுவது விதுரர் நீதி படி தானம் ஆகாது.

நாம் எந்த நோக்கத்தில் ஒரு காரியம் செய்கிறோமோ அந்த நோக்கம்தான் நிறைவேறும்.  உதாரணத்திற்கு நாம் நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும்.  ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது.  (தான் ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுத்து விட்டு அதை நான்தான் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு நரகம் தான் கிட்டும் என்று ஏற்கனவே விதுரர் கூறி உள்ளார். )

இவ்வாறு தானம் கொடுப்பது பற்றி விதுரர் தெரிவித்து உள்ளார்.   விதுர நீதியில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை பிறகு காண்போம்.

Monday, June 21, 2010

வேலைக்காரன் பற்றி விதுரர் கூறியுள்ளது என்ன - விதுர நீதி தொடர்ச்சி

இந்த காலத்தில் நல்ல வேலைக் காரர்கள் கிடைப்பதே அரிது. பெரிய நிறுவனமாய் இருந்தாலும் சரி, சின்ன நிறுவனம் இருந்தாலும் சரி அல்லது தனி நபராக  இருந்தாலும் சரி,  நல்ல ஆள் கிடைப்பதே அரிதாகி விட்டது.   மகாபாரத்தில் விதுரர் அப்போதே  வேலை காரரை எப்படி தேர்வு செய்ய வேண்டும் எப்படி நடத்த வேண்டும் என்று  கூறி விட்டார்.

வேலைக்கு ஆளை அமர்த்தும் முன் அவர் செய்ய வேண்டிய வேலை பற்றி முதலிலேயே கூறி விட்டு  வேலைக்கு அமர்த்த வேண்டும். வேலைக்கு அமர்த்தி விட்டு அதிக வேலை கொடுத்தால் பிரச்சினை தான் வரும். மேலும் வேலைக்கு வைப்பதற்கு முன் சம்பளம் பற்றி பேசி தீர்த்து விட வேண்டும். சம்பளத்தை  குழப்பமாக பேசக் கூடாது. வேலைக்கு ஆள்வந்தவுடன் அதிகம் வேலை கொடுக்கலாம் என்றும், சம்பளத்தை குறைத்துக் கொடுக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு வேலைக்காரனை வைத்தால் அது பிரச்சினையில் கொண்டு போய் முடிக்கும்.

வேலைக்காரன் நம் மீது விருப்பம் உடையவனாய் இருந்தால் அவன்  மீது கோபித்துக் கொள்ளக் கூடாது.  அவனை வசவு பாடாமல் இருக்க வேண்டும். ஆபத்தில் அவனை கை விட்டு விடக் கூடாது. மேலும் ஒரு கஷ்டமான வேலையை  வேலைக் காரர்களைக் கொண்டுதான் சாதிக்க முடியும். தனியாக இருந்து எதையுமே சாதிக்க முடியாது. எனவே வேலை காரனை நீக்கும் போது நிதானமாக யோசிக்க வேண்டும்.

காலத்தை தாழ்த்தாமல் முதலாளிக்கு எது பிடிக்குமோ அதை தாங்களாகவே செய்பவர்கள் நல்ல வேலை காரர்கள். மேலும் முதலாளி தப்பு செய்யும் பொது அதை தாழ்ந்த குரலிலாவது சொல்பவர்கள் நல்ல வேலைகாரர்கள் என்று வேலைகாரர்களின் குணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த குணம் உள்ள வேலைக்காரனை உடனடியாக வேலையிலிருந்து எடுத்து விடு என்றும் கூறி உள்ளார்.

எந்த வேலை ஆள் நாம் சொன்னதை செய்ய மறுக்கிறானோ
எந்த வேலை கொடுத்தாலும் அதை நாளை  செய்வேன் என்று காலம் தாழ்த்துகிறானோ
எவன் ஒருவன் தனக்குத்தான் தெரியும் என்று நினைக்கிறானோ

இவ்வாறு வேலை காரர்களை  பற்றி  அழகாகக்  கூறி உள்ளார். மேலும் விதுர நீதியில் உள்ள சமாச்சாரங்களை பிறகு காண்போம்.

ஆத்மாவின் நன்மைக்காக லோகத்தையே தியாகம் செய்யலாம் - விதுர நீதி தொடர்ச்சி

மகா பாரதத்தில் கிடைக்காத விஷயங்களே கிடையாது.  அவ்வளவு விஷயங்கள் அவற்றில் அடங்கியுள்ளன. அதில் உள்ள விதுர நீதியில் விதுரர் சொன்னதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக அவர் சொன்னதை மேற்கொண்டு காண்போம்.

ஒரு குலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு ஆளை தியாகம் செய்து விடலாம்.
ஒரு கிராமம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்தை தியாகம் செய்து விடலாம்.
ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு கிராமத்தையே தியாகம் செய்து விடலாம்.
ஒரு ஆத்மாவின் நன்மைக்காக லோகத்தையே தியாகம் செய்து விடலாம் என்று அடுத்ததாக கூறி உள்ளார்.

Monday, April 12, 2010

இந்த ஆறும் ஆயுசை குறைக்கும் கத்திகள் - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் அடுத்ததாக கீழ் கண்ட ஆறும் கத்தி போல் வெட்டி ஆயுசை குறைத்து விடும் கூறியுள்ளார்.

1  செருக்கோடு வாழ்தல்.
2  அதிகம் பேசுதல் (சத் விஷயங்களைத் தவிர )
3  பிரர்த்தியாருக்கு ஒன்றையும் விட்டுக் கொடுக்காமல் இருத்தல். கொஞ்சம் கூட தியாக மனப்பான்மை இல்லாதிருத்தல்.
4 . கோபப் படுத்தல்.
5 . நண்பனுக்கு துரோகம் செய்தல்.
6 பிரர்த்தியாரை கெடுத்தல்.

ஆகிய ஆறும் நமது ஆயுசை கெடுத்து விடும். எனவே இவற்றை ஒழித்து விட வேண்டும் என கூறியுள்ளார்.


 

Tuesday, April 6, 2010

இந்த எட்டு பேரும் சொர்க்கத்திற்கு போவர்கள் - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் தர்மத்தின் அம்சம் ஆவார்.  அவர் சொன்ன கருத்துக்கள் லோக ஷேமத்திற்கு சொன்னது ஆகும். விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசித்ததாக இருந்தாலும், சனாதன தர்மத்திற்கு சொன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.  கீழே சொல்லப் பட்ட பதினேழு பேரும் நரகத்திற்கு செல்வார்கள் என்று கூறியுள்ளார்.  ஆனால் சொர்க்கத்திற்கு எட்டு பேர் தான் செல்வார்கள் என்று கூறியுள்ளார்.  ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள இயலாது.  மனிதர்களின் குணங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப் பட்டுள்ளது.  ரஜோ குணம், தமோ குணம் மற்றும் சத்துவ குணம்.  இதில் சத்துவ குணம் உள்ளவர்கள்  மட்டும் தான் இறைவனை அறிந்து கொள்ள முடியும். ஆக மூன்றில் ஒரு பங்கு மனிதர்களுக்குத்தான்  சத்துவ குணம் உள்ளது.  எனவே சொர்கத்திற்கு செல்ல எட்டு வகை மனிதர்களே  தகுதியானவர்கள் என்று சொன்னார் போலும். 

சொர்க்கத்துக்கு செல்லும் எட்டு பேர்கள்.

1. பெரியோர் உபதேசத்தை கேட்பவர்கள்.
2. நீதி தெரிந்தவர்கள்.
3. கொடுக்கும் குணம் உள்ளவவர்கள்.
4. நைவேத்தியம் செய்யப்பட உணவையே உண்பவர்கள்.  அதாவது பெருமாளுக்கு உணவை அர்ப்பணித்து விட்டு உண்பவர்கள்.
5. பிறரை ஹிம்சிக்காதிருப்பவர்கள். பிறரை மனத்தாலோ, உடம்பாலோ அல்லது சொல்லாலோ ஹிம்சிக்காதவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
6. உலகத்தில் ஒருத்தருக்கும் தீங்கு செய்யாதவர்கள்.
7. செய்நன்றி மறக்காதவர்கள்.
8. சத்தியமே பேசுபவர்கள்.

Monday, March 15, 2010

இந்த 17 பேரும் நரகத்துக்கு செல்வார்கள் - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் கீழ்கண்ட ஐந்து இன்றியமையாத விஷயங்களை நன்றாக அறிந்த ஞானி ஆவார்.

பரமாத்ம சொரூபம் - இறைவனை பற்றி நன்றாக அறிந்து கொள்ளுதல்.

ஜீவாத்ம  சொரூபம் - ஜீவாத்மாவைப்  பற்றி நன்றாக அறிந்து கொள்ளுதல்

உபாய சொரூபம் - ஜீவாத்மா, பரமாத்மாவை அடைய உள்ள வழிகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல். பரமாத்மாவை அடைய ஜீவாத்மா கர்ம யோகத்தையோ, ஞான யோகத்தையோ அல்லது பக்தி யோகத்தையோ பின் பற்றலாம்.   இந்த வழிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.

புருஷார்த்த சொரூபம் - இறைவனை அடைந்தபின் நாம் செய்வது - அதாவது ஜீவாத்மா பரமாத்மாவை அடைய முயர்ச்சிக்கும்போது மேற்கொள்ளும்  பயணம்  மற்றும் அங்கு சென்றவுடன் இறைவனுடன்  கலந்து இருப்பது பற்றிய ஞானம்.

விரோதி சொரூபம் - இவ்வளவு நெருக்கமான ஜீவாத்மாவையும் பரமாத்வையும் சேர விடாமல் தடுக்கும் சாதனங்களைப் பற்றி தெரிந்து கொள்வது

ஆக மேல்சொன்ன ஐந்து விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டு அதனை நடைமுறைப் படுத்தியவர் விதுரர் ஆவார்.  அவர் திருதராஷ்டிரனுக்கு செய்த உபதேசத்தில்  கீழ் கண்ட 17 பேர்களும் நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று கூறியுள்ளார்.  அவற்றைப் பற்றிக் காண்போம்.

1. ஆகாயத்தை நோக்கி  வீணே முஷ்டியால் குத்துபவன். அதாவது தமக்கோ, சமூகத்திற்கோ பிரயோஜனம் இல்லாமல் வெற்று காரியம் செய்பவன்.

2.  தன்னை விட வலிமை உள்ளவனிடம் விரோதம் கொண்டு அவனை முறியடிக்க முயற்சி செய்பவன். அதாவது வானத்தை வில்லாக வளைக்க முயற்சிப்பவன்.

3. ஒரு விஷயத்தை பற்றி ஏற்றுகொள்ளாதவனிடம் அதைப் பற்றி சொல்பவன். ஒரு விஷயத்தை யாரிடம் சொல்ல வேண்டுமோ அவனிடம் தான் சொல்ல வேண்டும். புரிந்து  கொள்ளும் சக்தி இல்லாதவனிடம்  ஞானத்தை பற்றி  உபதேசிப்பது இதற்கு உதாரணமாகும்.

4. தர்மத்தை மீறி நடந்து விட்டு அவ்வாறு நடந்து கொண்டதை பெருமையாக சொல்லிக் கொள்பவன்.

5. விரோதியை  வணங்கி அவனது வீட்டில் உணவு அருந்துபவன்.

6. யார் ஒருத்தன் பெண்களை காப்பாற்றி அவர்களை உழைக்க வைத்து அதன் வருமானத்தில் தனது வாழ்கையை நடத்துகிறானோ அவன்.

7. யாரிடத்தில் பிச்சை கேட்கக் கூடாதோ - அவனிடம் பிச்சை  எடுப்பவன். மேலும் அவனிடம் பிச்சை பெறுவதற்காக அவனைப் பற்றி புகழ்ந்து பேசுபவன்.

8. யார் ஒருவன் சிறந்த குலத்தில்  பிறந்து விட்டு  அவனது குல தர்மத்தை காக்காமல் குலத்தை தாழ்த்தும் செயலை செய்பவன்.

9. நல்ல பலம் பொருந்தியவனுடன் விரோதம் கொண்டு தேவை இல்லாமல் அவனிடம் வம்புக்கு செல்பவன். 

10. செய்யும் வேலை பற்றி சிரத்தை  இல்லாதவனிடம்   அந்த  வேலையை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொள்பவன்.

11. எந்த பொருளில் ஆசை வைக்கக் கூடாதோ அந்த பொருள் மீது ஆசை கொள்பவன்.

12. மருமகளிடம்  பேசக்  கூடாத  வார்த்தை  அல்லது பரிகாசம்  செய்பவன்.

13. எந்த பெண்ணிடம் கூடக் கூடாதோ அந்த பெண்ணிடம் உறவு கொள்பவன் மற்றும் அவளை  கர்ப்பம்  தரிக்க வைப்பவன்.

14.பெண்களை நிந்திப்பவன்.

15. வாங்கிய பொருளை திருப்பி தர மறுப்பவன்.

16. தானம் என்று கொடுத்து விட்டு கொடுத்ததைப் பற்றி தம்பட்டம் அடிப்பவன்.

17. ஒரு பொய்யை  மெய்யாக்க  சாதுர்யமாக  பேசுபவன்.

ஆகிய மேல்  சொன்ன  17 பேர்களும்  நரகத்துக்குத்  தான்  செல்வார்கள் என்று விதுரரர் விதுர நீதியில் கூறியுள்ளார். மேல் கொண்டு அவர் சொன்ன அரிய பல விஷயங்களை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.
Related Posts with Thumbnails