Monday, July 5, 2010

தானம் செய்வது எப்படி - விதுர நீதி தொடர்ச்சி

மகாபாரதத்தில் உள்ள விதுர நீதியில் பல விஷயங்கள் சொல்லப் பட்டுள்ளன.  விதுர நீதி திருதராஷ்டிரனுக்காக விதுரர் சொன்னது ஆகும்.  விதுரர் மகா ஞானி. அவர் தர்மத்தின் அம்சம் ஆவார்.  உபதேசங்கள் தர பலர் இருந்தாலும் உபதேசங்களை உபதேசிப்பவர்கள் முதலில் பின்பற்ற மாட்டார்கள். ஆனால் விதுரர் அப்படி இல்லை. அவர் பின்பற்றியதையே உபதேசித்துள்ளார்.  மஹா பாரத்தில் விதுரரும் சஞ்சயனும் பல உபதேசங்களை தந்துள்ளனர்.  அவற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு பிறகு பின்பற்ற முயற்சிக்கலாம்.  விதுர நீதியை பின்பற்ற நாம் சத்துவ குணம் உடையவராக இருக்க வேண்டும்.

தானம் எவற்றை கொடுக்க வேண்டும்

தானம் நாம் நேர்மையாக சம்பாதித்த பொருளையே கொடுக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் வந்ததை கொடுத்தால் அது தானம் ஆகாது.

அந்த காலத்தில் ராஜாக்கள் தானம் கொடுக்கும் போது தானமாக கொடுக்கம் படும் பொருள் நேர்மையாக சம்பாதித்தது  என்று பிரதிக்ஞை செய்தால் தான் ஞானிகள் பெற்றுக் கொள்வார்களாம். எனவே தானம் கொடுக்கும் பொருள் நேர்மையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும்.

அடுத்து தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும். அந்த பொருள் மீது நாம் உரிமை கூறக் கூடாது. கோவிலுக்கு ஒரு விளக்கை போட்டு விட்டு அதில் இன்னார் உபயம் என்று எழுதுவது விதுரர் நீதி படி தானம் ஆகாது.

நாம் எந்த நோக்கத்தில் ஒரு காரியம் செய்கிறோமோ அந்த நோக்கம்தான் நிறைவேறும்.  உதாரணத்திற்கு நாம் நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும்.  ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது.  (தான் ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுத்து விட்டு அதை நான்தான் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு நரகம் தான் கிட்டும் என்று ஏற்கனவே விதுரர் கூறி உள்ளார். )

இவ்வாறு தானம் கொடுப்பது பற்றி விதுரர் தெரிவித்து உள்ளார்.   விதுர நீதியில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை பிறகு காண்போம்.

No comments:

Related Posts with Thumbnails