Tuesday, December 15, 2009

பக்தி வரவேண்டுமானால் இருக்கவேண்டிய குணங்கள் - விதுர நீதி தொடர்ச்சி

பாண்டவர்களிடம் தூது போய் வருமாறு திருதராஷ்டிரன் சஞ்சயன் ஐ அனுப்பி வைக்கிறான். சஞ்சயனும் தூது போய் வந்து இரவு நேரம் ஆகி விட்ட படியால் காலையில் விவரம் சொல்வதாக கூறி சென்று விடுகிறான். பிறகு உறக்கம் வராமல் திருதராஷ்டிரன் தவிக்கிறான். எனவே விதுரரை அழைத்தனுப்பி உபதேசம் கேட்கிறான். மன உளைச்சல் தாங்காமல் தவிக்கும் திருதஷ்டிரானுக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று மேலும் தனது உபதேசங்களை தொடர்கிறார்.

ஒருவனுக்கு பக்தி வர வேண்டுமானால் கீழ் கண்ட ஏழு குணங்களும்/சாதனங்களும் இருந்தாக வேண்டும் என்று கூறுகிறார்.

1. தேக சுத்தி - உடம்பு சுத்தமாக இருக்க வேண்டும். உடம்பு சுத்தம் என்றால் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆகார சுத்தம் வேண்டும். அதாவது சத்துவ குணங்களை வளர்க்கும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும். தமோ குணம் மற்றும் ரஜோ குணங்களை வளர்க்கும் உணவுகளை உட்கொண்டால் பக்தி வராது.

2. அதீத ஆசை கூடாது. - காண்பது, கேட்பது, உண்பது போன்ற அனைத்து விஷயங்களிலும் மிக அதிகமான ஆசை கூடாது.

3. அப்பியாசம் - திரும்ப  திரும்ப  செய்யும் சக்தி. அதாவது பகவானின் திருமேனியை நினைத்து, நினைத்து மனதில் நிறுத்த வேண்டும். பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ர நாமம் போன்றவற்றை திரும்ப திரும்ப அலுப்பு தட்டாமல் படிக்கும் சக்தி,   பெரியோர்களிடம் இவற்றை திரும்ப திரும்ப கேட்கும் சக்தி வேண்டும்.

4. கிரியா - கிரஹச்தினர் அனைவரும் பஞ்ச மஹா யக்கியம் தினமும் செய்யவேண்டும்.  வீட்டில் பஞ்ச சூனைகள் என்ற ஐந்து தோஷங்கள் உண்டு. அம்மி, உரல் மற்றும் உலக்கை, ஜல பாத்திரம், விளக்குமாறு, அடுப்பு என்ற ஐந்து இடங்களிலும் தினமும் நம்மை அறியாமல் பிராணி வதை நடை பெரும். எனவே ஐந்து தோஷங்களால் பாபம் வந்து சேரும்.   அந்த பாபங்களில் இருந்து விடுபட பிரம்ம யக்கியம், தேவ யக்கியம், ரிஷி யக்கியம், மனுஷ யக்கியம் மற்றும் பூத யக்கியம் செய்ய வேண்டும். யக்கியம் என்றால் பெரிய காரியம் ஒன்றும் அல்ல. பூ சந்தனம் கொண்டு வழி பட்டால் தேவ மற்றும் பிரம்ம யக்கியம் ஆகும்.  வேதம் சொன்னால் ரிஷி யக்கியம் ஆகும். விருந்தினரை உபசரித்தால் மனுஷ யக்கியம் ஆகும். மற்றும் வாசலுக்கு வரும் பிராணிக்கு உணவு இட்டால் பூத யக்கியம் ஆகும்.  இவற்றை  தினமமும்  செய்ய வேண்டும்.

5. நல்ல  குணங்கள் இருக்க வேண்டும் - அதாவது தயா இருக்க வேண்டும்.  இல்லாதவனை பார்த்தல் கொடுக்க வேண்டும் என்ற தயை வர வேண்டும். எப்போதும் சத்யம் சொல்ல வேண்டும். 

6. அதிக துன்பம் கூடாது -  தேச, கால மாறுபட்டினால்  வருத்தப் படாமல் இருக்க வேண்டும். அதாவது வேறு இடம் சென்று விட்டால் அங்கு ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும். தட்ப வெப்ப மாறுபாட்டை தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும். தண்ணீர், ஆகார மாறுபாட்டினால் துன்பப்படக் கூடாது.

7. அதிக மகிழ்ச்சி கூடாது - நமக்கு சுகம் தரும் விஷயங்கள் நடந்தால் அதற்காக அதிக மகிழ்ச்சி கூடாது.

ஆக மேல் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இருந்தால் மட்டுமே நமக்கு பக்தி வரும் என்றும் இந்த ஏழு படிக்கட்டுகளையும் நாம் தாண்ட வேண்டும் என்றும் விதுரர் விவரிக்கிறார். மேலும் விதுரர் உரைத்த உபதேசங்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

No comments:

Related Posts with Thumbnails