Showing posts with label விதுர நீதி. Show all posts
Showing posts with label விதுர நீதி. Show all posts

Tuesday, July 20, 2010

நமக்கு பிடித்தவர்கள் செய்வது எல்லாம் சரி ஆகாது. அது போல் பிடிக்காதவர்கள் செய்வது எல்லாம் தவறு ஆகாது. விதுர நீதி தொடர்ச்சி.

மகா பாரதத்தில் விதுரர் திருதராஷ்டிரனுக்கு பாண்டவர்களுக்கு சொத்தைப்  பிரித்துக் கொடுத்து விடு என்று பல வழிகளில் உபதேசிக்கிறார். மகா பாரதம் கதையாக சொல்லப் பட்டிருந்தாலும் அதில் அரிய பல விஷயங்கள் உள்ளன. விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கப் பட்டிருந்தாலும், அது எப்போதும் நாம் கடைப் பிடிக்க என்று  சொல்லப் பட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம்.
தனது மகன் துரியோதனன் செய்தது தவறு என்று தெரிந்தும், திருதராஷ்டிரன் துரியோதனன் செய்த அத்தனை கெட்ட காரியங்களையும் ஆமோதித்து வந்தான். துரியோதனன் தனக்கு பிடித்தவன் என்பதால்  அவன் செய்தது எல்லாம் சரி என்றே எடுத்துக் கொண்டான். அதுவே துரியோதனனுக்கு அழிவு ஆகியது. மேலும் பாண்டவர்கள் தனக்கு பிடிக்கவில்லை ஆதலால் அவர்கள் செய்வது தவறு என்றே எடுத்துக் கொண்டான்.

எனவே அவ்வாறு செய்வது சரி அல்ல என்றும் அவனை நல்ல வழிக்கு வா என்றும் விதுரர் உபதேசித்தார்.

மேற் கொண்டு விதுரர் சொன்னதை பிறகு பாப்போம்.

Monday, July 5, 2010

தானம் செய்வது எப்படி - விதுர நீதி தொடர்ச்சி

மகாபாரதத்தில் உள்ள விதுர நீதியில் பல விஷயங்கள் சொல்லப் பட்டுள்ளன.  விதுர நீதி திருதராஷ்டிரனுக்காக விதுரர் சொன்னது ஆகும்.  விதுரர் மகா ஞானி. அவர் தர்மத்தின் அம்சம் ஆவார்.  உபதேசங்கள் தர பலர் இருந்தாலும் உபதேசங்களை உபதேசிப்பவர்கள் முதலில் பின்பற்ற மாட்டார்கள். ஆனால் விதுரர் அப்படி இல்லை. அவர் பின்பற்றியதையே உபதேசித்துள்ளார்.  மஹா பாரத்தில் விதுரரும் சஞ்சயனும் பல உபதேசங்களை தந்துள்ளனர்.  அவற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு பிறகு பின்பற்ற முயற்சிக்கலாம்.  விதுர நீதியை பின்பற்ற நாம் சத்துவ குணம் உடையவராக இருக்க வேண்டும்.

தானம் எவற்றை கொடுக்க வேண்டும்

தானம் நாம் நேர்மையாக சம்பாதித்த பொருளையே கொடுக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் வந்ததை கொடுத்தால் அது தானம் ஆகாது.

அந்த காலத்தில் ராஜாக்கள் தானம் கொடுக்கும் போது தானமாக கொடுக்கம் படும் பொருள் நேர்மையாக சம்பாதித்தது  என்று பிரதிக்ஞை செய்தால் தான் ஞானிகள் பெற்றுக் கொள்வார்களாம். எனவே தானம் கொடுக்கும் பொருள் நேர்மையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும்.

அடுத்து தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும். அந்த பொருள் மீது நாம் உரிமை கூறக் கூடாது. கோவிலுக்கு ஒரு விளக்கை போட்டு விட்டு அதில் இன்னார் உபயம் என்று எழுதுவது விதுரர் நீதி படி தானம் ஆகாது.

நாம் எந்த நோக்கத்தில் ஒரு காரியம் செய்கிறோமோ அந்த நோக்கம்தான் நிறைவேறும்.  உதாரணத்திற்கு நாம் நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும்.  ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது.  (தான் ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுத்து விட்டு அதை நான்தான் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு நரகம் தான் கிட்டும் என்று ஏற்கனவே விதுரர் கூறி உள்ளார். )

இவ்வாறு தானம் கொடுப்பது பற்றி விதுரர் தெரிவித்து உள்ளார்.   விதுர நீதியில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை பிறகு காண்போம்.

Monday, June 21, 2010

வேலைக்காரன் பற்றி விதுரர் கூறியுள்ளது என்ன - விதுர நீதி தொடர்ச்சி

இந்த காலத்தில் நல்ல வேலைக் காரர்கள் கிடைப்பதே அரிது. பெரிய நிறுவனமாய் இருந்தாலும் சரி, சின்ன நிறுவனம் இருந்தாலும் சரி அல்லது தனி நபராக  இருந்தாலும் சரி,  நல்ல ஆள் கிடைப்பதே அரிதாகி விட்டது.   மகாபாரத்தில் விதுரர் அப்போதே  வேலை காரரை எப்படி தேர்வு செய்ய வேண்டும் எப்படி நடத்த வேண்டும் என்று  கூறி விட்டார்.

வேலைக்கு ஆளை அமர்த்தும் முன் அவர் செய்ய வேண்டிய வேலை பற்றி முதலிலேயே கூறி விட்டு  வேலைக்கு அமர்த்த வேண்டும். வேலைக்கு அமர்த்தி விட்டு அதிக வேலை கொடுத்தால் பிரச்சினை தான் வரும். மேலும் வேலைக்கு வைப்பதற்கு முன் சம்பளம் பற்றி பேசி தீர்த்து விட வேண்டும். சம்பளத்தை  குழப்பமாக பேசக் கூடாது. வேலைக்கு ஆள்வந்தவுடன் அதிகம் வேலை கொடுக்கலாம் என்றும், சம்பளத்தை குறைத்துக் கொடுக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு வேலைக்காரனை வைத்தால் அது பிரச்சினையில் கொண்டு போய் முடிக்கும்.

வேலைக்காரன் நம் மீது விருப்பம் உடையவனாய் இருந்தால் அவன்  மீது கோபித்துக் கொள்ளக் கூடாது.  அவனை வசவு பாடாமல் இருக்க வேண்டும். ஆபத்தில் அவனை கை விட்டு விடக் கூடாது. மேலும் ஒரு கஷ்டமான வேலையை  வேலைக் காரர்களைக் கொண்டுதான் சாதிக்க முடியும். தனியாக இருந்து எதையுமே சாதிக்க முடியாது. எனவே வேலை காரனை நீக்கும் போது நிதானமாக யோசிக்க வேண்டும்.

காலத்தை தாழ்த்தாமல் முதலாளிக்கு எது பிடிக்குமோ அதை தாங்களாகவே செய்பவர்கள் நல்ல வேலை காரர்கள். மேலும் முதலாளி தப்பு செய்யும் பொது அதை தாழ்ந்த குரலிலாவது சொல்பவர்கள் நல்ல வேலைகாரர்கள் என்று வேலைகாரர்களின் குணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த குணம் உள்ள வேலைக்காரனை உடனடியாக வேலையிலிருந்து எடுத்து விடு என்றும் கூறி உள்ளார்.

எந்த வேலை ஆள் நாம் சொன்னதை செய்ய மறுக்கிறானோ
எந்த வேலை கொடுத்தாலும் அதை நாளை  செய்வேன் என்று காலம் தாழ்த்துகிறானோ
எவன் ஒருவன் தனக்குத்தான் தெரியும் என்று நினைக்கிறானோ

இவ்வாறு வேலை காரர்களை  பற்றி  அழகாகக்  கூறி உள்ளார். மேலும் விதுர நீதியில் உள்ள சமாச்சாரங்களை பிறகு காண்போம்.

ஆத்மாவின் நன்மைக்காக லோகத்தையே தியாகம் செய்யலாம் - விதுர நீதி தொடர்ச்சி

மகா பாரதத்தில் கிடைக்காத விஷயங்களே கிடையாது.  அவ்வளவு விஷயங்கள் அவற்றில் அடங்கியுள்ளன. அதில் உள்ள விதுர நீதியில் விதுரர் சொன்னதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக அவர் சொன்னதை மேற்கொண்டு காண்போம்.

ஒரு குலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு ஆளை தியாகம் செய்து விடலாம்.
ஒரு கிராமம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்தை தியாகம் செய்து விடலாம்.
ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு கிராமத்தையே தியாகம் செய்து விடலாம்.
ஒரு ஆத்மாவின் நன்மைக்காக லோகத்தையே தியாகம் செய்து விடலாம் என்று அடுத்ததாக கூறி உள்ளார்.

Monday, April 12, 2010

இந்த ஆறும் ஆயுசை குறைக்கும் கத்திகள் - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் அடுத்ததாக கீழ் கண்ட ஆறும் கத்தி போல் வெட்டி ஆயுசை குறைத்து விடும் கூறியுள்ளார்.

1  செருக்கோடு வாழ்தல்.
2  அதிகம் பேசுதல் (சத் விஷயங்களைத் தவிர )
3  பிரர்த்தியாருக்கு ஒன்றையும் விட்டுக் கொடுக்காமல் இருத்தல். கொஞ்சம் கூட தியாக மனப்பான்மை இல்லாதிருத்தல்.
4 . கோபப் படுத்தல்.
5 . நண்பனுக்கு துரோகம் செய்தல்.
6 பிரர்த்தியாரை கெடுத்தல்.

ஆகிய ஆறும் நமது ஆயுசை கெடுத்து விடும். எனவே இவற்றை ஒழித்து விட வேண்டும் என கூறியுள்ளார்.


 

Tuesday, April 6, 2010

இந்த எட்டு பேரும் சொர்க்கத்திற்கு போவர்கள் - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் தர்மத்தின் அம்சம் ஆவார்.  அவர் சொன்ன கருத்துக்கள் லோக ஷேமத்திற்கு சொன்னது ஆகும். விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசித்ததாக இருந்தாலும், சனாதன தர்மத்திற்கு சொன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.  கீழே சொல்லப் பட்ட பதினேழு பேரும் நரகத்திற்கு செல்வார்கள் என்று கூறியுள்ளார்.  ஆனால் சொர்க்கத்திற்கு எட்டு பேர் தான் செல்வார்கள் என்று கூறியுள்ளார்.  ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள இயலாது.  மனிதர்களின் குணங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப் பட்டுள்ளது.  ரஜோ குணம், தமோ குணம் மற்றும் சத்துவ குணம்.  இதில் சத்துவ குணம் உள்ளவர்கள்  மட்டும் தான் இறைவனை அறிந்து கொள்ள முடியும். ஆக மூன்றில் ஒரு பங்கு மனிதர்களுக்குத்தான்  சத்துவ குணம் உள்ளது.  எனவே சொர்கத்திற்கு செல்ல எட்டு வகை மனிதர்களே  தகுதியானவர்கள் என்று சொன்னார் போலும். 

சொர்க்கத்துக்கு செல்லும் எட்டு பேர்கள்.

1. பெரியோர் உபதேசத்தை கேட்பவர்கள்.
2. நீதி தெரிந்தவர்கள்.
3. கொடுக்கும் குணம் உள்ளவவர்கள்.
4. நைவேத்தியம் செய்யப்பட உணவையே உண்பவர்கள்.  அதாவது பெருமாளுக்கு உணவை அர்ப்பணித்து விட்டு உண்பவர்கள்.
5. பிறரை ஹிம்சிக்காதிருப்பவர்கள். பிறரை மனத்தாலோ, உடம்பாலோ அல்லது சொல்லாலோ ஹிம்சிக்காதவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
6. உலகத்தில் ஒருத்தருக்கும் தீங்கு செய்யாதவர்கள்.
7. செய்நன்றி மறக்காதவர்கள்.
8. சத்தியமே பேசுபவர்கள்.

Monday, March 15, 2010

இந்த 17 பேரும் நரகத்துக்கு செல்வார்கள் - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் கீழ்கண்ட ஐந்து இன்றியமையாத விஷயங்களை நன்றாக அறிந்த ஞானி ஆவார்.

பரமாத்ம சொரூபம் - இறைவனை பற்றி நன்றாக அறிந்து கொள்ளுதல்.

ஜீவாத்ம  சொரூபம் - ஜீவாத்மாவைப்  பற்றி நன்றாக அறிந்து கொள்ளுதல்

உபாய சொரூபம் - ஜீவாத்மா, பரமாத்மாவை அடைய உள்ள வழிகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல். பரமாத்மாவை அடைய ஜீவாத்மா கர்ம யோகத்தையோ, ஞான யோகத்தையோ அல்லது பக்தி யோகத்தையோ பின் பற்றலாம்.   இந்த வழிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.

புருஷார்த்த சொரூபம் - இறைவனை அடைந்தபின் நாம் செய்வது - அதாவது ஜீவாத்மா பரமாத்மாவை அடைய முயர்ச்சிக்கும்போது மேற்கொள்ளும்  பயணம்  மற்றும் அங்கு சென்றவுடன் இறைவனுடன்  கலந்து இருப்பது பற்றிய ஞானம்.

விரோதி சொரூபம் - இவ்வளவு நெருக்கமான ஜீவாத்மாவையும் பரமாத்வையும் சேர விடாமல் தடுக்கும் சாதனங்களைப் பற்றி தெரிந்து கொள்வது

ஆக மேல்சொன்ன ஐந்து விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டு அதனை நடைமுறைப் படுத்தியவர் விதுரர் ஆவார்.  அவர் திருதராஷ்டிரனுக்கு செய்த உபதேசத்தில்  கீழ் கண்ட 17 பேர்களும் நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று கூறியுள்ளார்.  அவற்றைப் பற்றிக் காண்போம்.

1. ஆகாயத்தை நோக்கி  வீணே முஷ்டியால் குத்துபவன். அதாவது தமக்கோ, சமூகத்திற்கோ பிரயோஜனம் இல்லாமல் வெற்று காரியம் செய்பவன்.

2.  தன்னை விட வலிமை உள்ளவனிடம் விரோதம் கொண்டு அவனை முறியடிக்க முயற்சி செய்பவன். அதாவது வானத்தை வில்லாக வளைக்க முயற்சிப்பவன்.

3. ஒரு விஷயத்தை பற்றி ஏற்றுகொள்ளாதவனிடம் அதைப் பற்றி சொல்பவன். ஒரு விஷயத்தை யாரிடம் சொல்ல வேண்டுமோ அவனிடம் தான் சொல்ல வேண்டும். புரிந்து  கொள்ளும் சக்தி இல்லாதவனிடம்  ஞானத்தை பற்றி  உபதேசிப்பது இதற்கு உதாரணமாகும்.

4. தர்மத்தை மீறி நடந்து விட்டு அவ்வாறு நடந்து கொண்டதை பெருமையாக சொல்லிக் கொள்பவன்.

5. விரோதியை  வணங்கி அவனது வீட்டில் உணவு அருந்துபவன்.

6. யார் ஒருத்தன் பெண்களை காப்பாற்றி அவர்களை உழைக்க வைத்து அதன் வருமானத்தில் தனது வாழ்கையை நடத்துகிறானோ அவன்.

7. யாரிடத்தில் பிச்சை கேட்கக் கூடாதோ - அவனிடம் பிச்சை  எடுப்பவன். மேலும் அவனிடம் பிச்சை பெறுவதற்காக அவனைப் பற்றி புகழ்ந்து பேசுபவன்.

8. யார் ஒருவன் சிறந்த குலத்தில்  பிறந்து விட்டு  அவனது குல தர்மத்தை காக்காமல் குலத்தை தாழ்த்தும் செயலை செய்பவன்.

9. நல்ல பலம் பொருந்தியவனுடன் விரோதம் கொண்டு தேவை இல்லாமல் அவனிடம் வம்புக்கு செல்பவன். 

10. செய்யும் வேலை பற்றி சிரத்தை  இல்லாதவனிடம்   அந்த  வேலையை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொள்பவன்.

11. எந்த பொருளில் ஆசை வைக்கக் கூடாதோ அந்த பொருள் மீது ஆசை கொள்பவன்.

12. மருமகளிடம்  பேசக்  கூடாத  வார்த்தை  அல்லது பரிகாசம்  செய்பவன்.

13. எந்த பெண்ணிடம் கூடக் கூடாதோ அந்த பெண்ணிடம் உறவு கொள்பவன் மற்றும் அவளை  கர்ப்பம்  தரிக்க வைப்பவன்.

14.பெண்களை நிந்திப்பவன்.

15. வாங்கிய பொருளை திருப்பி தர மறுப்பவன்.

16. தானம் என்று கொடுத்து விட்டு கொடுத்ததைப் பற்றி தம்பட்டம் அடிப்பவன்.

17. ஒரு பொய்யை  மெய்யாக்க  சாதுர்யமாக  பேசுபவன்.

ஆகிய மேல்  சொன்ன  17 பேர்களும்  நரகத்துக்குத்  தான்  செல்வார்கள் என்று விதுரரர் விதுர நீதியில் கூறியுள்ளார். மேல் கொண்டு அவர் சொன்ன அரிய பல விஷயங்களை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

Monday, March 8, 2010

பேசுவதில் எது சிறந்தது - விதுர நீதி தொடர்ச்சி

மஹா பாரதத்தில் அரிய பல விஷயங்கள் அடங்கியுள்ளன.  அதில் நம்மால் பின்பற்ற முடியாது என்று எதுவும் கிடையாது.  அவ்வாறு இருந்திருந்தால் மகா பாரதம் எப்போதோ காணாமல் போய்  இருக்கும். எனவே முயற்சித்தால் நம்மால் கண்டிப்பாக பின்பற்ற முடியும்.  மகான்கள் பலர் அவதரித்து நமக்காக அவ்வாறு நடந்து காண்பித்து இருக்கிறார்கள். நாம் நம்மால் முடிந்தவரை அவர்கள் சொன்ன வழியில் நடக்க முயற்சிப்போம்.

விதுரர் எம தர்மரின் அம்சமாவர். அவர் தருமத்தைத் தவிர எதையும் சொன்னதில்லை.  திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய ராஜ்யத்தை பிரித்து கொடுக்கவில்லை. அதில் திருதராஷ்டிரனுக்கு இஷ்டமும் இல்லை. அவருக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும். அடுத்து விதுர நீதியில் என்ன தெரிவித்தார் என்று காண்போம்.

நம்மை யாரும் வசவு பாடினாலோ நம்மை யாரும் நிந்தித்தாலோ நாம் பதிலுக்கு எதுவும் கூறாமல் இருக்க வேண்டும். நாம் தர்ம வழியில் இருக்கும்போது நம்மை யாரும் வசவு பாடினால் நாம் அதற்காக துன்பமோ மன வேதனையோ பட வேண்டியதில்லை. அவ்வாறு நம்மை ஒருவர் திட்டினால்  நாம் செய்த பாவங்கள் அவருக்கு சென்று விடும். மேலும் அவர் செய்த புண்ணியங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும் என்று கூறியுள்ளார். நம்மை ஒருவர் திட்டினால் அவர் நம் மீது அம்பு விடுவதாக நினைத்து நாம் ஒதுங்கி விட வேண்டும். நாம் அதை தடுத்தால் நாமும் போருக்கு தயார் என்று அர்த்தம். அவ்வாறு சண்டை ஏற்பட்டால் நாமும் சண்டை போடுவதற்கு தயார் ஆகி விட்டோம் என்று அர்த்தம் ஆகி விடும். எனவே நாம் புத்திசாலியாக இருந்து நம்மை யாரும் திட்டினாலோ வசவு பாடினாலோ பேசாமல் இருந்து புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும்.

அடுத்து எது உத்தமம் என்று கூறுகிறார்.  பேசக் கூடாத இடத்தில் பேசாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் உண்மை பேசுவது சிறந்தது.  உண்மை பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் பிறருக்கு பிரியம் ஏற்படுமாறு பேசுவது சிறந்தது.  அதுவும்  கட்டாயம் ஆகி விட்டால் தர்மம் பேசுவதே சிறந்தது என்று  என்று பேசுவதில் எது சிறந்தது மிக அருமையாக கூறியுள்ளார்.

மேற்கொண்டு விதுரர் சொன்னதை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

Monday, February 22, 2010

எது வந்தால் எது நம்மிடம் இருந்து விலகி விடும். - விதுர நீதி தொடர்ச்சி

மகா பாரத்தில் அரிய பல விஷயங்கள் அடங்கியுள்ளன. நாம் நல்ல கதிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் மகான்கள் நமக்கு பல நல்ல விஷயங்களை  அருளி உள்ளனர். நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் நமக்காக அருளிச் சென்றதை கேட்டு தர்ம வழியில் நடப்போம்.

விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கப் பட்டுள்ளது. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய சொத்தை கொடுக்க மனம் இல்லை. அவர்களுக்கு பிரித்து கொடுத்து விடு என்று தனது உபதேசத்தை மேலும் தொடர்கிறார்.

எது வந்தால் எது பறி போகும் என்றும் அஹங்காரம் வந்தால் அத்தனையும் போய் விடும் என்றும் அழகாக கீழ் வருமாறு விவரிக்கிறார். .

முதுமை உருவத்தின் அழகைப் பறித்து விடும்.  - இளமையில் இருக்கும் அழகு முதுமை முதுமை வந்து விட்டால் போய் விடும்.

ஆசை தைரியத்தை பறித்து விடும். - ஆசை நமக்கு வந்து விட்டால் நம்மிடம் உள்ள தைரியம் போய் விடும். உதராணத்திற்கு நாம் தனியாக செல்வதாக நினைத்துக் கொள்வோம். நம்மிடம் பொருளோ அல்லது நகையோ இருந்து அதன் மீது ஆசையும்  இருந்தால்  அதை நம்மிடம் இருந்து யாரும் அபகரித்து விடுவார்களோ என்ற எண்ணம் நமது தைரியத்தை பறித்து விடும்.

ம்ருத்யு (மரணம்)  வந்தால் பிராணன் போய் விடும்.

பொறாமை வந்தால் அது நம்மை தர்ம மார்க்கத்தில் இருந்து விலக்கி விடும்.
நமக்கு பொறாமை இல்லாமல் இருந்தால் நாம் தர்ம மார்க்கத்திலேயே இருப்போம். எப்போது மற்றவரைப் பார்த்து நமக்கு பொறாமை வருகிறதோ உடனேயே நாமும் அவர் போல இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவோம். அவ்வாறு நாமும் இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம். எனவே பொறாமை தர்ம மார்க்கத்தை பறித்து விடும்.

கோபம் வந்தால் செல்வம் போய் விடும்.  - விசுவாமித்திரருக்கு தவ வலிமையே செல்வமாகும். அவருக்கு கோபம் வந்தவுடன் எவ்வாறு அவரது தவ வலிமை குறைந்து விட்டதோ அது போல நமக்கு கோபம் வந்தால் நம்மிடம் உள்ள செல்வம் சென்று விடும்.

ஒழுக்கம் கெட்டவனுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கமும் பறி போகும்.  நாம் நல்லவர்களுக்கு தொண்டு புரியலாம்.  ஆனால் சுய லாபத்திற்காக ஒழுக்கம் கெட்டவர்களுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கமும் போய் விடும் என்பது உறுதி.

காமம் வந்தால் வெட்கம் போய் விடும்.

மேல் சொன்னவைகள் எதாவது ஒன்று வந்தால் ஒன்று போய் விடும்.  ஆனால் அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்து போகும் என்று அழகாக விதுரர் எடுத்துரைக்கிறார்.

Monday, February 15, 2010

யாருடைய ரூபம் எப்போது வெளிப்படும்? - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் தனது உபதேசத்தை தொடர்கிறார். திருதராஷ்டிரன்  எதையும்  ஏற்றுக் கொள்வதாக இல்லை. இருப்பினும் தனது உபதேசத்தை தொடர்கிறார்.

யார் ரூபம் எப்போது வெளிப்படும் என்று தனது அடுத்த உபதேசத்தில் விளக்குகிறார்:-
தங்கத்தின் தன்மை - நாம் வைத்திருக்கும் தங்கம் உண்மையான தங்கமா என்று அதை காய்ச்சும்போதுதான்    தெரியும் அதுவரை தெரியாது.
சத் புருஷன்  - ஒருவான் சத்புருஷன் என்றால் அவனது ஆச்சார அனுஷ்டதில் தான் தெரியும். அவன் தான் சத் புருஷன் என்று தெரிவித்துக் கொண்டாலும் உண்மையான சத் புருஷன் என்பது அவனது நடத்தையில் தெரிய வந்து விடும்.
சாது - ஒருவன் சாது என்று சொல்லிக் கொண்டாலும் சாது போன்று உடை அணிந்துக் கொண்டாலும் அவரது பேச்சில் அவர் சாதுவா சாது இல்லையா என்று தெரிந்து விடும். உடை சாது வாக இருந்தாலும் அவர் பேச்சு வேறுமாதிரி இருந்தால் அவர் சாது இல்லை என்று தெளிவாக தெரிந்து விடும்.
சூரன் -  ஒருவன் தன்னை சூரன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவனுக்கு பயம் வந்தால் அவன்  சூரன் இல்லை என்பது  வெளி உலகிற்கு தெரிந்து விடும்.
தைரியமிக்கவன் -  தன்னை தைரியசாலி என்று சொல்லிகொல்பவன் உண்மையான தைரியசாலி இல்லை என்றால் அவனது காசு தொலைந்து விட்டால் உண்மை வெளிப்பட்டு விடும். தைரியசாலி என்றால் தனது சொத்து தொலைந்தாலும் அதை மீண்டும் சம்பாதிர்க்கும் வரை தைரியாமாகவே இருப்பான்.
நமக்கு வேண்டியவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் -  நமக்கு ஆபத்து வந்தால் நமக்கு யார் வேண்டியவன் யார் வேண்டதாவன் என்ற உண்மை வெளிப் பட்டுவிடும். நம்மிடம் காசு தொலைந்து விட்டாலோ நமக்கு ஆபத்து வந்து விட்டாலோ நம்மிடம் ஒட்டிக் கொண்டு இருந்தவர்கள் நாம் அருகில் இருந்து உதவி புரியா விட்டால் அவர் நம்மிடம் ஏன் இருந்தார் என்ற உண்மை தெரிந்து விடும்.

இவ்வாறு யார் ரூபம் எப்போது வெளிப்படும் என்று அழகாக விவரித்தார். மேற்கொண்டு உபதேசித்ததை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

Friday, January 29, 2010

ஏன் என்னை கடவுளே தர்ம வழியில் நடத்தக் கூடாது?

திருதராஷ்டிரனுக்கு விதுரர் உபதேசம் செய்து வருகிறார். அப்போது ஒரு சந்தேகம் திருதராஷ்டிரனுக்கு எழுகிறது. நம்மை ஏன் என்னை கடவுளே தர்ம வழியில் நடத்தக் கூடாது, நாம் செய்யும் செயல் தர்மத்தின் வழியில் இல்லை என்றால் உடனே நம்மை ஏன் கடவுள் தடுக்கக் கூடாது என்ற சந்தேகம் எழுவதாகவும் அதற்கு பதிலும் விதுர நீதியில் கொடுக்கப் பட்டுள்ளது.

நம்மை காக்க தேவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்டை மேய்க்கும் இடையன், ஆடு பின்பு நின்று கொண்டு அதை ஓட்டுவது  போல,  நம்மை நடத்துவதாக நினைத்துக் கொள்வோம். நமக்கு அது பிடிக்காமல் போகும். மேலும் நாம் செய்யும் செயல் தவறாக இருந்தால் உடனே அவ்வாறு செய்யக்  கூடாது என்று தேவர்கள் தடுப்பார்கள். அது நமது சுதந்திரத்திற்கு தடையாகவும்  இருக்கும். அதுவும் நமக்கு நிச்சயம் பிடிக்காது. எனவேதான் நமக்கு யோசிக்க புத்தி  கொடுத்துள்ளார்கள். நாம்தான் புத்தியை பயன்படுத்தி எது பாவம் எது புண்ணியம் என்று தெரிந்து கொண்டு அதன் படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார்.

மேலும் நாம் தர்மம்  எவை  என்று தெரிந்து கொள்ளவும் நமக்கு உறுதுணையாக இருப்பதற்கும் மகான்கள் தோன்றி உள்ளார்கள். சாஸ்திர புஸ்தகங்கள் அவர்களால் எழுதப் பட்டுள்ளன. நமக்கு புத்தி கொடுக்கப் பட்டுள்ளது. நாம்தான் நல்ல வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று விதுரர் கூறி உள்ளார். மேலும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், நமக்கு நல்ல புத்தியை கொடுத்து விடுவார்கள். நாம் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மேலும் தெரிவிக்கிறார்.

ஆனால் சிலர்  தேகமும் உடம்பும் ஒன்று என்று நினைக்கிறார்கள். அவர்கள் கண்களால்  பார்ப்பதையே  உண்மை என்றும்  கண்களுக்கு  தெரியாததை  நம்பவும்  மாட்டார்கள் .

அப்படி நினைப்பது சரி என்றால் நாம் பார்க்காத விஷயங்கள் இல்லை என்று கூற முடியாது. நமது எல்லை சிறியது என்றும் நமது அறிவு அவ்வளுவுதான் என்றும்  தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சுவற்றிற்கு பின்னால் உள்ளதை  நாம் பார்க்க முடியாது என்றாலும் அங்கு உள்ள வஸ்துக்கள் இல்லை என்று கூற முடியாது. அப்படி எதுவும் இல்லை என்று நினைத்தால் அது முட்டாள் தனம் ஆகும். 

ஆத்மாவும் உடம்பும் ஒன்று என்றே நினைப்பவர்கள் உடம்பு சுகத்திற்க்காக எதையும் செய்து விடுவார்கள். உதாரணத்திற்கு பிறரது பொருளை ஒருவர்  பிடுங்கி அனுபவித்தால் அது  உடம்பிற்கு சுகம் தரும். ஆனால் அது ஆதமாவிற்கு பாவத்தை சேர்த்து விடும் என்று கூறியுள்ளார். எனவே நமக்கு ஆத்ம சிந்தனை முதலில் வர வேண்டும் என்று கூறி உள்ளார்.

மேற்கொண்டு விதுரர் தெரிவித்ததை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

Friday, January 15, 2010

தர்மபடி தான் நீதி சொல்ல வேண்டும், உறவாக இருந்தாலும் நீதியையே சொல்ல வேண்டும். - விதுர நீதி தொடர்ச்சி

மகாபாரத்தில் அரிய பல கருத்துக்கள் சொல்லப் பட்டுள்ளன. அதில் நாம் விதுர நீதியைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து நீ சுவராஸ்யமான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிராயே நன்மை தரும் பல விஷயங்களை மேலே சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

விதுரர் தொடர்கிறார். திருதராஷ்டிரா எல்லா ஜீவ ராசிகளிடம் நேர்மை யாக நடந்துக் கொண்டாலே சகல தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். எனவே எப்போதும் நியாமாக நடந்து கொள் என்று கூறுகிறார். மேலும் உதராணமாக பிரகலாதன் எப்படி நியாமாக நடந்து கொண்டான் என்பது பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேள் என்று ஒரு கதையை  ஆரம்பிக்கிறார்.

பிரகலாதனுக்கு விரோச்சணன் என்று ஒரு மகன் இருந்தான். (பிரகலாதன் தந்தை ஹிரண்ய கசிபு,  பிரகலாதன் மகன் விரோச்சணன் மற்றும் விரோச்சணன் மகன் மகாபலி ஆவார்கள். ) பிரகலாதனுக்கு வயதாகிற்று. விரோச்சணன் வாலிபத்தை அடைந்தான். அப்போது சுதன்வா என்ற பிரமாணனும் அந்த ராஜ்யத்தில் இருந்தான்.  அங்கு கேசினி என்ற அழகிய பெண்ணும் இருந்தாள். கேசினியை மணக்க விரோச்சணனும் சுதன்வாவும் ஆசைப் பட்டார்கள். எனவே கேசினிக்கு குழப்பம் ஆயிற்று.  எனவே இரண்டு பேரில்  ஒருவனை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தாள். கேசினியை விரோச்சணன் சந்தித்தான். நாங்கள் தேவர்கள், பிராமணர்கள்  மற்றும் அனைவரையும் வென்றாயிற்று. நான்தான் சுதன்வாவை விட உயர்ந்தவன்.   என்னை மணந்து கொள் என்று கேட்டுக் கொண்டான்.

கேசிநியோ உனக்கு மட்டும் தான் என்னை மணக்க தகுதியோ! சுதன்வாவுக்கு ஏன் தகுதி கிடையாது.  நாளை இரண்டு பேரும் வாருங்கள் நான் எனக்கு பிடித்தமானவரை தேர்ந்தெடுக்கிறேன்  என்று கூறினாள்.

மறு நாள் விரோச்சணன் முதலில் வந்தான். கேசினியின் அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். பிறகு சுதன்வா அங்கு வந்தான்.  கேசினி சுதன்வாவை  நமஸ்கரித்தாள். அவனுக்கு தர வேண்டிய மரியாதையை தந்தாள். பிறகு விரோச்சணன் சுதன்வாவைப்  பார்த்து நீயும்  இங்கு அமர்ந்து கொள் என்று கூறினான். சுதன்வாவோ  தகப்பனார் பக்கத்தில் பிள்ளை அமர்ந்து கொள்ளலாம். ஒரு சத்திரியன் அருகில் மற்றொரு சத்திரியன் அமர்ந்து கொள்ளலாம். ஒரு பிராமணன் அருகில் மற்றொரு பிராமணன் அமர்ந்து கொள்ளலாம். ஒரு உயர்ந்தவன் ஒருகில் மற்றொரு உயர்ந்தவன் அமர்ந்து கொள்ளலாம். நான் உனது அருகில் அமர மாட்டேன் என்று கூறினான். அதற்கு  விரோச்சணன் ஆமாம் நீ கீழேயே தர்ப்பத்தை விரித்து அமர்ந்து கொள் என்று கேலி செய்தான்.

அதற்கு சுதன்வா விரோச்சனனைப் பார்த்து நான் உன்னவிட உயர்ந்தவன். நான் உட்கார்ந்திருந்தால் உனது தந்தை எனக்கு சமமாக உட்காரமாட்டார். எனவே நான்தான் உயர்ந்தவன் என்று கூறினான். இரண்டு பேருக்கும் யார் உயர்ந்தவர் என்ற போட்டி உண்டாயிற்று. விரோச்சணன் என்னிடம் உள்ள சொத்து அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன், நீ உயர்ந்தவன் என்று தெரிந்தால் அத்தனையையும் கொடுத்து விடுகிறேன் என்று கூறினான். அதற்கு சுதன்வா,  வேண்டும் என்றால் உயிரை பணயமாக வைப்போம் மற்ற எந்த சொத்தும் எனக்கு தேவை இல்லை என்று கூறினான்.

இருவருக்கும் நீதியை சொல்ல ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமே. எனவே சுதன்வா விரோச்சனனைப் பார்த்து இந்த தேசத்து ராஜாவும்  உனது தந்தையும்  ஆகிய பிரகலாதனுக்கு அந்த தகுதி இருக்கிறது. அவர் நியாயத்தை சரியாக சொல்வார். அவரிடம் செல்வோம் என்று கூறினான். விரோச்சணனும் ஒத்துக் கொண்டு பிரகலாதனிடம் செல்ல முடிவு செய்தனர்.

இருவரும் ராஜாவிடத்தில் சென்றார்கள். இருவரும் சேர்ந்து வருவதை பார்த்து விரோச்சனிடம்,  சுதன்வா உனக்கு நண்பனா என்று கேட்டார். அதற்கு விரோச்சணன் நாங்கள் இருவரும் நேர் விரோதம் கொண்டவர்கள் யார் உயர்ந்தவர் என்று தெரிந்து கொள்ள வந்துள்ளோம் என்று கூறினான்.  ராஜாவும் நடந்ததை கேட்டு உயிரைப் பணயமாக வைத்துள்ளதுப் பற்றியும் அறிந்துக் கொண்டார்.  பிறகு ராஜா சுதன்வாவை  நமஸ்கரித்து பருத்த வெள்ளைப் பசுவை தானமாக கொடுத்தார்.

சுதன்வா, இந்த தானத்தை விட உன்னிடம் சத்யத்தை எதிர்ப் பார்க்கிறேன். எனவே சத்யத்தை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ராஜாவோ நீ பிரம்மத் ஞாநி  அவனோ எனது பிள்ளை,  நான் என்ன கூற வேண்டும் என்று சுதன்வாவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார். சுதன்வா உனது சொத்தையும் ராஜ்யத்தையும் உனது மகனுக்கு கொடு. நீ சத்யத்தை மட்டும் சொல்.  எங்களில் யார் உயர்ந்தவர் என்று கூறு என்று கேட்டுக் கொண்டான்.

ராஜா இந்த தர்ம சங்கடாமான சூழ்நிலையில் நான் பொய் சொல்லிவிட்டால் என்ன ஆகும் என்று கூறு என்று கேட்டுக் கொண்டார். சுதன்வா பொய் சொல்பவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றி கூறினான்.

நீ ஒரு வேளை பொய் சொல்லிவிட்டால் -

1.  அக்னி முன்பு கை பிடித்த மனைவியை வேறு பெண்ணிற்க்காக கை விட்டு விட்டால் முதல் மனைவிக்கு ஏற்படும் துன்பத்தை அனுபவிப்பாய்.

2.  சூதாட்டத்தில் மொத்த சொத்தையும் இழந்து விட்டவன் எவ்வாறு தவிப்பானோ அவ்வாறு தவிப்பாய்.

3.  தலை முழுக்க அதிக பாரத்தை ஏற்றி விட்டு அவனை வெய்யிலில் விட்டால் அவன் எவ்வாறு தவிப்பானோ அவ்வாறு தவிப்பாய். 

மேலும் பொய் சொல்பவர்கள்  என்ன தண்டனைக்கு உள்ளாவர்கள் என்றும் சுதன்வா கூறினான்.

1.  பிராநிக்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் ஐந்து தலை முறை கெட்டுப் போவான்.
2. பசுவுக்காக பொய் சொன்னால் அவன்  பத்து தலை முறை கெட்டுப் போவான்.
3. ஒருவன் குதிரைக்காக பொய் சொன்னால் அவன் நூறு தலை முறை கெட்டுப் போவான்.
4. ஒருவன் ஒரு பெண் விஷயத்திற்காக பொய் சொன்னால் அவன் ஆயிரம் ஜென்மம் கெட்டுப் போவான்.
5. தங்கத்திற்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் ஒரு தலை முறை முன்பும் ஒரு தலை முறை பின்பும் கெட்டுப் போவான்.

ஆனால் பூமிக்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் எத்தனை தலை முறை உண்டோ அதனை தலை முறையும் கெட்டுப் போவன்.  கேசினி பூமிக்கு சமம். அவள் விஷயத்தில் பொய் சொல்லக் கூடாது. எனவே எங்களில் யார் உயர்ந்தவர் என்று சரியாக சொல் என்று கேட்டுக் கொண்டான்.

பிரகலாதன் நறுக்கு தெரித்தார் போல தனது தீர்ப்பை சொன்னார். சுதன்வா தந்தை உனது தந்தையை விட உயர்ந்தவர். சுதன்வா தாய்  உனது தாயை விட உயர்ந்தவர்.  விரோச்ச்சனா நீ அகங்காரம்  கொண்டு உள்ளாய்.    உன்னைவிட சுதன்வாவே உயர்ந்தவன் என்று கூறி முடித்தார்.   பிறகு சுதன்வாவை  நமஸ்கரித்து எனது மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடு என்றும் கேட்டுக் கொண்டார்.

சுதன்வா எனக்கு உனது மகனின் உயிர் வேண்டாம்.  கேசினியும்  எனக்கு வேண்டாம். நீ சத்யம் தவறாது பேசினாயே அது போதும் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். இவ்வாறு கதையை முடித்து விட்டு விதுரர் அமைதி காத்தார். பிறகு பாண்டவர்களுக்கு சேர வேண்டிய ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்துவிடு என்று திருதராஷ்டிரனிடம் கூறினார்.

திருதராஷ்டிரனோ கேட்பதாக இல்லை. மேலும் தனது உரையை விதுரர் தொடர்ந்தார். மேற்கொண்டு என்ன தெரிவித்தார் என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

Wednesday, January 6, 2010

உணவு பழக்கம் எப்படி இருக்க வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு விற்கு தம்பி ஆவார். அவர் திருதராஷ்டிரனுக்கு உபதேசித்தது  விதுரநீதி ஆகும்.  இந்த நீதியில் அரிய பல விஷயங்கள் கூறப் பட்டுள்ளன.  நாம் ஒவ்வொரு நீதியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  அடுத்து உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  அதைப் பற்றி நாம் இப்போது காண்போம்.

சத்துவகுணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய மூன்று குணங்களில் ஒரு குணம் ஒருவனுக்கு அதிகமாக இருக்கும். இந்த மூன்று குணங்களில் சத்துவ குணமே நல்ல குணமாகும்.  ரஜோ குணம் உள்ளவன் கோபக்காரனாகவும்  தமோ குணம் உள்ளவன் மந்த புத்தி உள்ளவனாகவும் இருப்பான்.   சத்துவ குணம் வளர பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உணவுப் பழக்கம் ஆகும். 

முதலில் நாம் சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து சாப்பிட வேண்டும். எப்படி தூண்டிலில் உள்ள தீனியை நினைக்காத மீனும் பொறியில் உள்ள உணவைப் பற்றி நினைக்காத எலியும் மாட்டிக் கொள்ளுமோ அவ்வாறு பார்த்தது எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது. எது செரிக்குமோ அதைத்தான்  சாப்பிட வேண்டும்.  அவ்வாறு செரித்தாலும்  எது உடம்புக்கு ஆரோக்கியம்  கொடுக்குமோ அதைத்தான் சாப்பிட வேண்டும்.  சாப்பிட சுவையாக இருக்கின்றது என்று எண்ணி சாப்பிட்டு  விட்டு அது உடம்புக்கு கெடுதல் செய்யுமானால் அதை சாப்பிடக் கூடாது. 

பகவானுக்கு நைவேத்தியம் செய்து விட்டுத்தான் நாம் சாப்பிட வேண்டும்.  அப்போது தான் நமக்கு சத்துவ குணம் வளரும். குளிக்காமலும்  பெருமானுக்கு நிவேதனம் செய்யாமலும் சாப்பிடக் கூடாது.  (ஆனால் இவ்வாறு பிற இடத்தில் செய்யப் பட்ட உணவுப் பற்றி தெரியாததால் [சமைக்கும்போது உள்ள குணம், பெருமானுக்கு நிவேதனம் செய்ததா இல்லையா என்பது பற்றி ] ) சாப்பிட தவிர்ப்பவர்களைப்  பற்றி ஒரு சாரர் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

அடுத்து அதிக காரம், சூடு, உப்பு, கார்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. இவ்வாறு சாப்பிட்டால் நமக்கு ரஜோ குணம் தான் வளரும். அடுத்து  மிச்சத்தை சாப்பிடக் கூடாது. எச்சில் படாத உணவைத் தான் சாப்பிட வேண்டும்.  அவ்வாறு  சாப்பிட்டால் நமக்கு தமோ குணமே வளரும்.

அடுத்து  எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி. இரண்டு வேளை சாப்பிடுபவன் போகி. மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி.  அதற்கு மேல் அதாவது நான்கு, ஐந்து வேளைகளைப்  பற்றி அவர் கூறவில்லை.  அவ்வாறு சாப்பிடுவோம் என்று நினைக்க வில்லை போலும். 

சத்துவ குணம் இருந்தால்தான் பகவானைப் பற்றி சிந்தனை வரும். இல்லை என்றால் சிந்தனையே வராது.  இவ்வாறு சத்துவ குணம் வளர சாப்பிட வேண்டிய உணவுப் பழக்கத்தைப் பற்றி விதுர நீதியில் கூறியுள்ளார்.   அடுத்து வரும் நீதியில் என்ன சொன்னார் என்று அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

Monday, January 4, 2010

சிறந்த ஆசிரியன் எப்படி இருக்க வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி

மஹா பாரதத்தில் நமக்கு வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன.  அவற்றில் உத்தியோக பர்வத்தில் உள்ள விதுர நீதியை பற்றி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  திருதராஷ்டிரனுக்கு விதுரர் உபதேசித்தது  நமக்கு இன்றும் உபயோகமுள்ளது ஆகும்.  மேற்கொண்டு சிறந்த ஆசிரியனாக விளங்க கீழ்க் கண்ட குணங்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். (விதுர நீதியில் இதுவரை சொல்லப்பட்டதை  பழைய பதிவுகளை பார்த்து  தெரிந்து கொள்ளவும்.)

1. யார் ஒருவன் அடங்கிப் போன சண்டையை மூட்டிவிடாமல்  இருப்பானோ அவன் சிறந்த ஆசிரியன்.  - இந்த காலத்தில் நமது பகையை மறந்து இருக்கும்போது நமக்கு அதை நினைவூட்டி பகையை ஞாபகமூட்டி சண்டையை மூட்டி விடுபவர்களே அதிகம் இருக்கிறார்கள்.  நாம்தான் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டும்.

2. யாரிடம் கர்வம் இல்லையோ அவன் சிறந்த ஆசிரியன் - ஆசிரியனிடம் கர்வம் சிறிதளவும் இருக்கக் கூடாது.  எல்லாம் தெரிந்திருப்பதால்தான் அவன் ஆசிரியன் ஆவான்.  தனக்கு தெரிந்து  இருப்பதை கர்வமாக நினைப்பவன் சிறந்த ஆசிரியன் ஆக மாட்டான்.

3. தனது வறிய நிலையை சொல்லாதவனே  சிறந்த ஆசிரியன் -  ஆசிரியன் தனது கஷ்டத்தப் பற்றி மாணவர்களிடம் சொல்லக் கூடாது.  எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கொடது.  இந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம் இருந்தாலும் அவர்கள்  இன்னும் கிடைக்கவேண்டும் என்று நினைத்தால் அதை வறிய நிலை என்று எடுத்துக் கொள்ளலாம்.

4. எந்த துன்பத்தில் இருந்தாலும் செய்ய கூடாத காரியத்தை செய்யாதவனே   சிறந்த ஆசிரியன். - ஆசிரியன் மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும்.  தனக்கு எதாவது கஷ்டம் வந்தால் அதிலிருந்து தப்பிக்க எந்த கெட்ட காரியத்தையும் செய்து விடக் கூடாது.  பகவான் நம்மை சோதிக்கலாம்.  நாம்தான் மன தைரியத்துடன் எந்த கஷ்டத்தையும் தாங்கிக்கொள்பவராக  இருக்க வேண்டும்.

இவ்வாறு ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய குணங்களை விதுர நீதியில் கூறியுள்ளார்.  மேற்கொண்டு என்ன சொன்னார் என்பதை அடுத்த அத்தியாயத்தில்  காண்போம்.

Saturday, January 2, 2010

இந்த பத்து பேர்களை தள்ளி வைக்க வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி

மஹா பாரதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன. ராமாயணம் மற்றும் மஹா பாரதத்தை நாம் இரண்டு இதிகாசங்களாக ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆதமாவிர்க்கு நன்மை பயப்பதாய் சத் விஷயங்களை காட்டி கொடுப்பதாக மஹா பாரதம் விளங்குகிறது. அது பெரியதாக இருப்பதாலும் உயர்ந்ததாக இருப்பதாலும் தான் அது மகா பாரதம் என்று அழைக்கப் படுகிறது. இதை தினமும் ஒரு சிறு பகுதியாவது நாம் படித்தால் நமக்கு நன்மைகள் பல கிட்டும். நாம் நமது பிறவிப் பயனைப் பெற்று பிரம்மத்தை அடைவோம் என்பது நிச்சயம்.

விதுரர் தொடர்ந்து செய்த போதனைகளை மேற்கொண்டு பார்ப்போம். கீழ்க் கண்ட பத்து பேர்களை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்கிறார்.

1. கள் குடித்து போதையில் வெறி பிடித்தவன்.
2. எதையுமே கவனமின்மையால் தப்பு தப்பாகவே செய்பவன்.
3. பைத்தியம் - இவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
4. களைத்தே காணப்படுபவன் -  எந்த வேலை சொன்னாலும் கை சரியில்லை, கால் சரியில்லை என்று ஏதாவது காரணம் சொல்லுபவன். இவனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
5. கோபப்படுபவன். - எதற்கெடுத்தாலும் கோபம் அடைவதால் எந்த நன்மையையும் கிடைக்காது. மூளைதான் மழுங்கிப் போகும்.
6. பெரும் பசியாளன் - எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன். இவனாலும் ஒரு நன்மையும் இல்லை.
7. பதட்டத்தில் அவசரமாக எந்த செயலையும் செய்பவன். இவன் செய்த வேலையில் சுத்தம் எப்போதுமே இருக்காது.
8. எதையும் யாருக்கும் கொடுக்காமல் தானே அனுபவிப்பவன். - இவனுக்கு பிறவி  விமோசனமே கிடைக்காது.
9. எல்லாவற்றிற்கும் ஆசைப்படுபவன். - இவனது கவனம் பொருட்களின் மீதே இருக்கும்.
10. எதற்கெடுத்தாலும் பயப்படுபவன். - எந்த செயலை செய்ய மாட்டான். பயந்து கொண்டே இருப்பான். இவனாலும் ஒரு பிரயோஜனமும் கிடையாது.

ஆக இந்த பத்து பேரையும் தள்ளி வைக்க வேண்டும் என்று விதுரர் கூறியுள்ளார். மேற்கொண்டு உபதேசித்ததை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

நவத்துவாரம் கொண்ட பட்டினம் நமது உடம்பு - விதுர நீதி தொடர்ச்சி

மஹா பாரதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன.  ராமாயணம் மற்றும் மஹா பாரதத்தை நாம் இரண்டு இதிகாசங்களாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.  ஆதமாவிர்க்கு நன்மை பயப்பதாய் சத் விஷயங்களை காட்டி கொடுப்பதாக மஹா பாரதம் விளங்குகிறது. அது பெரியதாக இருப்பதாலும் உயர்ந்ததாக இருப்பதாலும் தான் அது மகா பாரதம் என்று அழைக்கப் படுகிறது.  இதை தினமும் ஒரு சிறு பகுதியாவது நாம் படித்தால் நமக்கு நன்மைகள் பல கிட்டும்.  நாம் நமது பிறவிப்  பயனைப் பெற்று பிரம்மத்தை அடைவோம் என்பது நிச்சயம்.

விதுரர் தொடர்ந்து  செய்த போதனைகளை மேற்கொண்டு பார்ப்போம்.

நமது உடம்பை  ஒன்பது துவாரங்கள் (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குகள் , வாய் மல ஜல துவாரங்கள்)  கொண்ட பட்டினம் ஆக தெரிந்து கொள்ளவேண்டும்.   இது ரஜோ  தமோ மற்றும் சத்துவ குணம் அல்லது வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று தூண்களால் கட்டப் பட்டது ஆகும். இந்த மூன்று தூண்களை வைத்து ஐந்து புலன்களை சாட்சியாக வைத்து நல்ல விலை நிலமாக கொண்டு   இதில் நல்ல பயிர்களை (குணங்களை) வளர்ப்பவனே சிறந்த ஆத்மா.  உடம்பு விளைநிலம், ஆத்மாதான் உழவன். இதில் நல்ல பயிரை விளைவிப்பவனே நல்ல உழவன்.  இதில் நல்ல பயிரை வளர்த்தால் தான் லாபம். இதில் கெட்ட குணம் போன்ற கள்ளி செடியை வளர்த்து என்ன லாபம்? எனவே இதில் நல்ல குணங்களை வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  மேற்கொண்டு என்ன உபதேசித்தார் என்று அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

Monday, December 28, 2009

வெண்ணை சாப்பிட்டது போன்ற சந்தோஷத்தை கொடுப்பவை - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் திருதராஷ்டிரனுக்கு தொடர்ந்து உபதேசம் செய்கிறார். பஞ்ச லோகங்களையும் ஆளும் வல்லமை கொண்ட பஞ்ச பாண்டவர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்துவிடு திருதராஷ்டிரா என்று கூறுகிறார்.  ஆனால் அவனோ ராஜ்யத்தை பிரித்துக் கொடுப்பதாக இல்லை. எனவே தனது உபதேசத்தை மேற்கொண்டு தொடர்கிறார். கீழ் கண்ட எட்டும் வெண்ணை சாப்பிட்டது போன்ற சந்தோஷத்தை கொடுப்பவை என்று கூறுகிறார். 

1.  நல்லோர்களின் நட்பு - நாம் எப்போதும் நல்லோர்களிடம் நட்பு வைத்திருக்க வேண்டும். நமக்கு அதனால் நன்மைகள் பல கிடைத்துக் கொண்டே இருக்கும். மேலும் அது நமக்கு இன்பத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். நம்மை அவர்கள் நன்றாக வழி நடத்துவர். இதுவே நமது நட்பு கெட்டவர்களிடம் இருந்தால் அது நமக்கு தீமையும் அதனால் நமக்கு துன்பத்தையுமே கொடுக்கும்.

2. நிறைய பண வரவு -  பண வரவு வந்தால் அது சந்தோஷத்தை கொடுக்கும்.  அதற்காக நாம் பணத்தை சம்பாதிப்பதே நமது நோக்கம் என்று கொள்ளக் கூடாது.

3. பிள்ளையை அனைத்துக் கொள்ளுதல். - நமது பிள்ளையை அனைத்துக் கொள்ளும் ஒவ்வொரு க்ஷணமும்  நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அப்போது நமது கவலைகள் நமக்குத்  தெரியாது.

4. கருத்தொருமித்த இல்லறம் - இது அமைவது கடினம். நல்ல இல்லறம் அமைந்து விட்டால்  அது நமக்கு எப்போதும் சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒருவர் செய்யும் செயல் மற்றொருவருக்கு தொல்லையாக இருக்காது.

5. கஷ்டமான நேரத்தில் கேட்கப்பட்ட நல்வார்த்தை. - நமக்கு எதாவது கஷ்டம் வந்து விட்டால் அந்த நேரத்தில் நமக்கு ஆறுதலாக சொல்லும் நல் வார்த்தைகள் துன்பத்தை நீக்கி சந்தோஷத்தைக் கொடுக்கும்.  அது போன்று நமக்கு ஆறுதல் சொல்ல நினைக்கும் நண்பர்களோ உறவினர்களோ வேண்டும்.

6. தன்னுடன் கூட உள்ளவர்களின் நடுவில் பெருமையாக வாழுதல். - நமக்கு நல்ல உத்தியோகம் கிடைத்து அதுவும் சொந்த ஊரில் கிடைத்து விட்டால் அது நமக்கு ஆனந்தத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கும். அதுவே நம்மை யாரும் தெரியாத ஒரு ஊரில் பெரிய உத்தியோகத்தில் இருந்தால் நமக்கு பணம் கிடைக்குமே ஒழிய பெருமை கிடைக்காது.

7. நாம் நினைத்தது நடந்தால் - நினைத்தது நடக்கும் போது அது வெண்ணை சாப்பிட்டது  போன்ற சந்தோஷத்தைக் கொடுக்கும்.

8. நம்மை சுத்தி உள்ள மக்களிடையே பூஜிக்க தகுந்தவர்களாக வாழ்வது - நமது தொழில், செயல் பிறருக்கு நன்மை தருவதாக இருந்தால் அதனால் மக்கள் நம்மை பூஜித்துக் கொண்டு இருப்பார்கள். அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.

இவ்வாறு அந்த காலத்திலேயே எக்காலத்துக்கும்  பொருந்தக் கூடிய விஷயங்களை அழகாக எடுத்துரைத்தார். மேற்கொண்டு ஒன்பது பற்றி என்ன தெரிவித்தார் என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

Tuesday, December 22, 2009

தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் அடுத்து கீழ் கண்ட ஏழும் துக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே இவைகளை தவிர்க்குமாறு தெரிவிக்கிறார்.

பெண்களை அவமான படுத்துதல்
சூதாட்டம் ஆடுதல்
அதிகமான வேட்டை ஆடுதல்
கள் குடித்தல்
நல்ல வார்த்தை பேசாது இருத்தல்
சிறுகுற்றத்திற்கு அதிக தண்டனை கொடுத்தல்
பணத்தை விரயம் பண்ணுதல்

இவ்வாறு இந்த காரியங்களை செய்தால் அது துக்கத்தில் கொண்டு போய்  விட்டு விடும் என்று விதுரர் கூறியுள்ளார். மேற்கொண்டு அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

தெரிந்து கொள்ளவேண்டிய ஆறு - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் தொடர்ந்து, உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு மேலும் உபதேசிக்கிறார். இந்த உபதேசம் இப்போதும் நமக்கு உபயோகமுள்ளதாக உள்ளது.

1. உயர்நிலைக்கும் செல்வத்திற்கும் ஆசைபடுவர்கள் இதை ஆறையும் விட்டுவிட வேண்டும்.
அதிக நித்திரை 
மயக்கம் அல்லது மந்தம்
பயம்
கோபம்
சோம்பல்
எந்த காரியத்தையும் முடிக்காமல் நீட்டிக்கொண்டே செல்லுதல்.

2. இந்த ஆறு பேரின் நட்பை எப்படி ஓட்டை உள்ள படகிலிருந்து உடனே  தப்பித்துக் கொள்ள நினைப்போமோ அவ்வாறு உடனடியாக விட்டு விட வேண்டும்.

எல்லாம் தெரிந்திருந்தும் எதையும் கற்றுக் கொடுக்காத ஆச்சார்யன்/ குரு
வேதத்தை கற்றுக்கொள்ளாமல் யக்கியம் செய்ய வருபவர்
இன்சொல் பேசாத மனைவி
ரட்சிக்க வேண்டிய ஆட்கள் இருந்தும், நம்மை காக்காமல் தூங்கிகொண்டிருக்கும் ராஜா
வீட்டை விட்டு வெளியே செய்யும் தொழிலை, வீட்டுக்குள்ளேயே செய்ய நினைக்கும் சோம்பேறி.
காட்டுக்குச் சென்று தவம் செய்ய நினைக்கும் நாவிதன்.

3. இந்த ஆறை எப்போதும் விட்டு விடக்கூடாது

சத்யம்
தானம்
சோம்பலின்மை
பொறாமை படாமல் இருத்தல்
பொறுமை
தைரியம்

4. இந்த ஆறும் ஜீவ லோகத்தில் எப்போதும் சுகமே தரும்.

தின பண வரவு
எப்போதும் ஆரோக்கியம்
பிரியமான மனைவி
பிரியமாக பேசும் மனைவி
நம் சொல் கேட்கும், நமது வசத்தில் உள்ள பிள்ளை
நாம் படித்திருப்பதற்கு  தகுந்தாற்போல்  நல்ல சம்பாத்தியம் கொடுக்கும் வேலை.

5. இந்த ஆறையும் ஜெயித்தே தீர வேண்டும்.

காமம்
கோபம்
பேராசை
கர்வம்
பொறாமை
மயக்கம்

6. இந்த ஆறு வகைபட்டவரும் பிறரை நம்பி வாழ்பவர்கள் 

திருடர்கள்     (முட்டாளை நம்பி)
வைத்தியர்கள்     (வியாதி பிடித்தவர்களை நம்பி)
வேசிகள்      (காம வசப்பட்ட ஆண்களை நம்பி)
யக்கியம் செய்யும் பிராமணர்கள்      (எஜமானரை நம்பி)
ராஜா       (சண்டை செய்யும் வீரர்களை நம்பி)
பண்டிதர்கள்     (புத்தி இல்லாதவர்களை  நம்பி)

7. கீழ்க் கண்டவற்றை முகூர்த்தம் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பசு
மனைவி (எப்போதும் பரிவுடன் நடத்த வேண்டும்)
சேவகன் (சேவகன் எஜமானரின் இசைவுக்கு ஏற்ப எப்போதுமே  நடந்து கொள்ள வேண்டும்)
நெற்பயிர்
கல்வி (தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும்)
நம்மை விட தாழ்ந்தவர்கள் (இவர்கள் எப்போது காலை வாரி விடுவார்கள் என்று தெரியாது)

8. இந்த ஆறு பேருக்கும் நன்றி காட்ட மாட்டார்கள்

கற்ற பின் ஆசார்யன், குரு
திருமணம் ஆனவுடன் தாய்
காம இச்சைக்குப் பிறகு பெண்
வேலையை செய்து முடித்துவிட்ட வேலை ஆள்
ஆற்றை கடந்த பின் ஓடம்
வைத்தியம் முடிந்தவுடன் வைத்தியர்

இவ்வாறு விதுரர் நீதியில் திருதராஷ்டிரனுக்கு நீதி உபதேசிக்கப் பட்டுள்ளது.  அடுத்து விதுரர் என்ன சொன்னார் என்று அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

Sunday, December 20, 2009

தெரிந்து கொள்ளவேண்டிய ஐந்து - விதுர நீதி தொடர்ச்சி.

திருதாஷ்டிரனுக்கு பாண்டவர்கள் சொத்தை பிரித்துக் கொடுப்பதில் இம்மி அளவும் பிரியம் இல்லை. எனவே உறக்கம் வராமல் தவிக்கிறான். அவனுக்கு விதுரர் கூறும் உபதேசமே விதுர நீதி ஆகும். மேற்கொண்டு ஐந்து ஐந்தாக அடுத்த நீதிகளை கீழ் வருமாறு கூறுகிறார்.

1. இந்த ஐந்தும் போற்றப்படவேண்டியது/ போற்றவேண்டியவர்கள்

மாத, பிதா, அக்னி (எந்த காரியம் செய்தலும் அக்னி முன்பே நாம் செய்வோம். அந்த  அக்னி நம்மை எங்கும் எப்போதும் நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லும்), ஆத்மா என்கின்ற நான் மற்றும் நமக்கு ஞானம் ஊட்டிய குரு

2. இந்த ஐந்து பேரும் பூஜிக்கப்  பட வேண்டியவர்கள்.

தேவர்கள் அல்லது தெய்வங்கள் (இவர்களை நாம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.)

பித்ரு (சிரார்த்தம், திதி முதலியவற்றை விடாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.)

சக மனிதர்கள் (இவர்களுக்கு தேவையான உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும்)

சந்நியாசி (வணங்கி அவர்களுக்கு தேவையானதை கொடுக்க வேண்டும்)

விருந்தினர் (இவர்கள் நமது வீட்டிற்கு வந்தால் வெறும் வயிற்றோடு திரும்பக் கூடாது)

3. இந்த ஐந்து பேரும் நம்மால் நிழல் போல தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள்

நண்பன், எதிரி, நண்பனாகவும் எதிரியாகவும்  இல்லாத பொதுவானவன்,  நம்மை வாழ்விக்கப் போகிறவர், நம்மால் வாழப் போகிறவர். (இந்த ஐவரும் நம்மை சுற்றிக் கொண்டே இருப்பார்கள். நாம் தான் அவர்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்).

4. அடக்கி வைத்திருக்க வேண்டிய ஐந்து இந்திரியங்கள் (புலன்கள்)

எப்படி பாத்திரத்தில் உள்ள தண்ணீர் ஒரு சிறு ஓட்டை இருந்தாலும் வெளியே சென்று விடுமோ அது போல ஒரு புலன் கட்டுப் பட்டுபட்டை இழந்தாலும் மற்ற புலன்கள் கட்டுக்கு அடங்காமல் போய் விடும்.

இவ்வாறு
 நாம் அறிந்து கொள்ளவேண்டியவற்றை ஐந்து ஐந்தாக கூறுகிறார். அடுத்து விதுரர் திருதராஷ்டிரனுக்கு உபதேசித்ததை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
Related Posts with Thumbnails