Wednesday, January 6, 2010

உணவு பழக்கம் எப்படி இருக்க வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு விற்கு தம்பி ஆவார். அவர் திருதராஷ்டிரனுக்கு உபதேசித்தது  விதுரநீதி ஆகும்.  இந்த நீதியில் அரிய பல விஷயங்கள் கூறப் பட்டுள்ளன.  நாம் ஒவ்வொரு நீதியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  அடுத்து உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  அதைப் பற்றி நாம் இப்போது காண்போம்.

சத்துவகுணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய மூன்று குணங்களில் ஒரு குணம் ஒருவனுக்கு அதிகமாக இருக்கும். இந்த மூன்று குணங்களில் சத்துவ குணமே நல்ல குணமாகும்.  ரஜோ குணம் உள்ளவன் கோபக்காரனாகவும்  தமோ குணம் உள்ளவன் மந்த புத்தி உள்ளவனாகவும் இருப்பான்.   சத்துவ குணம் வளர பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உணவுப் பழக்கம் ஆகும். 

முதலில் நாம் சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து சாப்பிட வேண்டும். எப்படி தூண்டிலில் உள்ள தீனியை நினைக்காத மீனும் பொறியில் உள்ள உணவைப் பற்றி நினைக்காத எலியும் மாட்டிக் கொள்ளுமோ அவ்வாறு பார்த்தது எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது. எது செரிக்குமோ அதைத்தான்  சாப்பிட வேண்டும்.  அவ்வாறு செரித்தாலும்  எது உடம்புக்கு ஆரோக்கியம்  கொடுக்குமோ அதைத்தான் சாப்பிட வேண்டும்.  சாப்பிட சுவையாக இருக்கின்றது என்று எண்ணி சாப்பிட்டு  விட்டு அது உடம்புக்கு கெடுதல் செய்யுமானால் அதை சாப்பிடக் கூடாது. 

பகவானுக்கு நைவேத்தியம் செய்து விட்டுத்தான் நாம் சாப்பிட வேண்டும்.  அப்போது தான் நமக்கு சத்துவ குணம் வளரும். குளிக்காமலும்  பெருமானுக்கு நிவேதனம் செய்யாமலும் சாப்பிடக் கூடாது.  (ஆனால் இவ்வாறு பிற இடத்தில் செய்யப் பட்ட உணவுப் பற்றி தெரியாததால் [சமைக்கும்போது உள்ள குணம், பெருமானுக்கு நிவேதனம் செய்ததா இல்லையா என்பது பற்றி ] ) சாப்பிட தவிர்ப்பவர்களைப்  பற்றி ஒரு சாரர் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

அடுத்து அதிக காரம், சூடு, உப்பு, கார்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. இவ்வாறு சாப்பிட்டால் நமக்கு ரஜோ குணம் தான் வளரும். அடுத்து  மிச்சத்தை சாப்பிடக் கூடாது. எச்சில் படாத உணவைத் தான் சாப்பிட வேண்டும்.  அவ்வாறு  சாப்பிட்டால் நமக்கு தமோ குணமே வளரும்.

அடுத்து  எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி. இரண்டு வேளை சாப்பிடுபவன் போகி. மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி.  அதற்கு மேல் அதாவது நான்கு, ஐந்து வேளைகளைப்  பற்றி அவர் கூறவில்லை.  அவ்வாறு சாப்பிடுவோம் என்று நினைக்க வில்லை போலும். 

சத்துவ குணம் இருந்தால்தான் பகவானைப் பற்றி சிந்தனை வரும். இல்லை என்றால் சிந்தனையே வராது.  இவ்வாறு சத்துவ குணம் வளர சாப்பிட வேண்டிய உணவுப் பழக்கத்தைப் பற்றி விதுர நீதியில் கூறியுள்ளார்.   அடுத்து வரும் நீதியில் என்ன சொன்னார் என்று அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

No comments:

Related Posts with Thumbnails